அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த இந்து மாணவியை கிறிஸ்தவ மதத்துக்கு மாற ஆசிரியை வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பபள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்தவ கல்வி நிறுவனமான அந்த பள்ளி, லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியது. ஆனால், லாவண்யா அதை விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகம், பொங்கல் விடுமுறையில் அவரை வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. மேலும் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் சமையல் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி லாவண்யா அங்குள்ள தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். திடீரென லாவண்யா வாந்தி எடுத்து மயங்கியதை கண்ட பள்ளி நிர்வாகமும், வார்டனும், அவரை அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், விடுதி வார்டன், அவரது பெற்றோரை அழைத்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, லாவண்யாவின் பெற்றோர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், லாவண்யா உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், உடனே தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் விஷம் குடித்தது தெரிய வந்தது. விஷம் குடித்தததால், அவரது நுரையீரல் கிட்டத்தட்ட 85% பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மாணவி லாவன்யாவிடம் புகாரை பெற்று கொண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “என் பெயர் லாவண்யா. அவர்கள் (பள்ளி) என் முன்னிலையில் என் பெற்றோரிடம் என்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி, மேல் படிப்புக்கு உதவ முடியுமா என்று கேட்டனர். நான் ஏற்காததால், என்னை திட்டிக்கொண்டே இருந்தார்கள்,” என வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி லாவன்யாவின் உறவினர்கள், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் முன்பு கூடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்., விடுதி வார்டன், லாவன்யாவை, மதமாறச்சொல்லி வற்புறுத்தியதால் லாவன்யா பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் வழக்கு பதிந்து, வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து திருவையாறு குற்றவியல் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக தமிழ்நாட்டில் மாணவிகள், குழந்தைகள் தற்கொலைகள் பாலியல் தொல்லை காரணமாக அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு புறம் மதமாற்றம் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் பிளஸ்2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.