டில்லி:

டந்த 40நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.

அயோத்தி மேல்முறையீடு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ ஆவணங்கள் இருந்தால் அடுத்த 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ள உச்சநீதி மன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை தலைமைநீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் 17-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.