ட்சிக்குள் உடைப்புகள் ஏற்படும் போதெல்லாம்-எதிர் எதிர் துருவங்கள் உயர்நீதிமன்றம்,உச்சநீதி மன்றம், தேர்தல் ஆணையம் என கலர் கலர் கட்டிடங்களின் படிகள் ஏறி களைத்து போகின்றன.

சின்னங்கள் தான் ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்கிறதா? இல்லை என்கிறது நாட்டு நடப்புகள். சில தேர்தல் முடிவுகளை பார்க்கலாம்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக நெஞ்சங்களில் உதயசூரியன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தது. 45 ஆண்டுகளுக்கும் அதிகமாக பட்டி தொட்டி எங்கும் இரட்டை இலை படர்ந்திருந்தது.

சில நாட்களில் வடிவமைக்கப்பட்ட குக்கர்- இலையை பொசுக்க-சூரியன் மங்கி மறைந்தே போனது.

இது நேற்றைய உதாரணம்.

அதற்கு முந்தைய தேர்தல்களும் இது போன்ற வியப்பு செய்திகளையே விட்டுச்சென்றுள்ளது.

இரட்டை காளைகளும், இந்திய தேசிய காங்கிரசும், இந்தியாவும் பின்னிப்பினைந்திருந்த காலத்தில்- காங்கிரஸ் உடைந்தது.

புதிய கட்சி தொடங்கிய இந்திரா காந்திக்கு கிடைத்த பசுவும், கன்றும் –அவருக்கு அமோக வெற்றியை பெற்று தந்து ஒரிஜினல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்பிய வரலாறு- தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இன்றைக்கும் கோப்புகளாக உள்ளது.

மீண்டும் தமிழகத்துக்கே வருவோம்.

அப்போது தான் அ.தி.மு.க.வை ஆரம்பித்திருந்தார் எம்.ஜி.ஆர். சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தல். சின்னமாய் இரட்டை இலை கொடுத்தார்கள்.

காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசை -இரட்டை இலை வாரி சுருட்டியது. ஆளும் கட்சியான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு  தள்ளப்பட்டது.

1977-ல் ஆட்சியை பிடித்த அ.தி,மு.க. 80 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 2 இடங்களோடு சுருங்கியது.

1996-ல் காங்கிரசை உடைத்து த.மா.கா.வை ஸ்தாபித்தார்- மூப்பனார். கட்சியை ஓட்டுவதற்கு சைக்கிள் சின்னம் கொடுத்தது தேர்தல் ஆணையம்.தாய் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க விடாமல் செய்தது-சைக்கிள்.

ஒவ்வொரு மாநிலமாக சென்று பார்த்தால்- இப்படி கொத்து கொத்தாக உதாரணங்களை அள்ளி வரலாம்.

இதனால் சொல்லப்படும் செய்தி என்ன வென்றால்-

கட்சிகளுக்கு சின்னம் ஒரு பொருட்டல்ல.

–பாப்பாங்குளம் பாரதி