சென்னை: அதிமுகவினர் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என்று கூறியதுடன் நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை என்றால், அவர் விலகத் தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி தலைமையில், அதிமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒபிஎஸ், நேற்று நடைபெற்ற போராட்டம் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, அப்படி நான் கருதவில்லை என்றார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய எடப்பாடி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,  இதுதொடர்பாக   ஏற்கெனவே என்னுடன் இருப்பவர்கள் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளனர்.  பழனிசாமி நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை என்றால், அவர் விலகத் தயாரா? என்று கேட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அதிமுக போராட்டத்தைத் தொடர்ந்து, எடப்பாடி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது,  செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், ” தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்ஸை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் அப்பட்டமாகவே தெரிகிறது” என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.