சென்னை:கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சிமீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது.
கடந்த வாரம், ரேசன் பருப்பு கொள்முதலில் ரூ.100கோடி ஊழல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரேஷன் பொருட்கள் வாங்கியதில் ரூ 2028 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து வெளியாகி வரும் ஊழல்களால், கடந்த 5ஆண்டுகால எடப்பாடி ஆட்சியின் அவலம் சந்தி சிரிக்கிறது.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், மத்திய அரசு வழங்கி அரிசியை வெளி சந்தையில் விற்று அதில் ஒரு மாபெரும் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்த ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், மின்சாரக் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், காக்னிசென்ட் டெக்னாலஜி கம்பெனிக்கு பிளானிங் பெர்மிஷன் கொடுப்பதற்கு அமெரிக்க டாலரில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல், எல்இடி விளக்கு ஊழல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களில் ஊழல், மின் நிலையம் கட்டுமானப் பணிகளில் ஊழல் மட்டுமின்றி, கொரோனா காலக்கட்டத்தில். உயிர்காக்கும் கொரோனா தடுப்புக் கருவிகள், மருந்துகள் வாங்குவதில் ஊழல் என மலைபோல ஊழல்புகார்கள் குவிந்துள்ளன.
இந்த ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளது. அப்போது, அதிமுக அமைச்சரவையை அலங்கரித்த பல முன்னாள்கள், சிறை கம்பிக்ளுக்கு பின்னால் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
தற்போது அம்பலமாக உள்ள ரேசன் பொருட்கள் கொள்முதலில் ரூ 2028 கோடி ஊழல் நடந்துள்ளது அறப்போர் இயக்கம் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த மாபெரும் ஊழல் தொடர்பாக கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மீது அறப்போர் இயக்கம், தமிழக லஞ்ச ஒழிப்புதுறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊழல்மீது ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால், பல முன்னாள்கள், புழல்சிறையில் கம்பி எண்ண வேண்டிய சூழல் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, சசிகலாவின் ஆதரவால் ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் அவரையே தூங்கியெறிந்து விட்டு, தனது ஆதரவு படைகளுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சி மீது பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்ட நிலையிலும், பலமுறை நீதிமன்றங்களே அப்போதைய அதிமுக அரசுமீது சாட்டையை சுழற்றியது. அதிமுக அரசு மீது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனர்னரை சந்தித்து, புகார் மனு கொடுத்தும், அதுகுறித்து விசாரணை நடத்த கவர்னர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், மத்தியஅரசின் துதிபாடியாக எடப்பாடி அரசு திகழ்ந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு துறைகள் தயக்கம் காட்டின.
ஆனால், தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுமீதான ஊழல் புகார்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கி உள்ளன. கடந்த வாரம், ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு விற்பனை தொடர்பான டெண்டரில் பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 60 வரை அதிகம் கோட் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று டெண்டரை ரத்து செய்தது. இதனால், சுமார் 120 கோடி ரூபாய் அரசின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற டெண்டர்கள் மூலம் எத்தனை நூறு கோடி எடப்பாடி அன் கோ சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தால் தலையே சுற்றுகிறது.
இந்த நிலையில், தற்போது, எடப்பாடி அரசின் ரேசன் கடை ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் பகீர் தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, fடந்த 5 ஆண்டுகளில் ரேஷன் பொருட்கள் வாங்கியதில் ரூ 2028 கோடி ஊழல் நடந்துள்ளது என அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளது. அந்த புகார் மனுவில் கூறியிதுப்பதாவது,
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) ரேஷன் கடைகள் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ 2028 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பகத்திற்கு புகார் அளித்துள்ளது.
இதற்கு இந்த துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் இயக்குநர்கள் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் குமாரசாமியின் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். உடனடியாக இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடந்த வேண்டும்.
1. கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வண்ணமும் இத்தனை வருடங்கள் ரேஷன் துறையான TNCSC ற்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாத வண்ணமும், டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகள், சர்க்கரையில் 2019 லும் பாமாயிலில் 2017 லும் பருப்பில் 2015 லும் மாற்றப்பட்டன.
2. கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்டி போர்வையில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறச்செய்து, அதுவரை சப்ளை செய்த நிறுவனங்கள் பங்குபெற முடியாத வகையில் நிதி தகுதி(turnover), அனுபவம் போன்றவை மாற்றப்பட்டு, டெண்டர் சட்டத்தின் முக்கிய இலக்கான ஆரோக்கியமான போட்டி இல்லாமல் செய்யப்பட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டர் கிரிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகமாகவே இதில் பங்கெடுத்தனர். அவர்கள் இப்பொருட்களை மீண்டும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சப்ளை செய்ய கொடுத்தனர்.
3. மிக முக்கியமாக, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுக்கும் முன் வரை மற்ற நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட சந்தை மதிப்பிற்கு பொருட்கள் வாங்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்து டெண்டர்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சந்தை மதிப்பை விட மிகவும் அதிக விலை கொடுத்து சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு வாங்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் நமது வரிப்பண இழப்பும், இதனால் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக பெரும் லாபத்தையும் ஈட்டினர்.
4. கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த பொருட்கள் சப்ளை செய்யவில்லை. அவர்கள் அந்த வேலையை ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு கொடுத்து விட்டனர். Godown வரை அவர்கள் தான் போய் இறக்குகிறார்கள். கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்து, கிலோவிற்கு ரூ 10 முதல் 30 வரை ஊழல் செய்துள்ளார்கள்.
5. உதாரணத்திற்கு கனடியன் மஞ்சள் பருப்பு / துவரம் பருப்பு டெண்டர்களில் டெண்டர் விதிகள் 2014 மற்றும் 2015ல் கிறிஸ்டி நிறுவன சார்பில் மாற்றியது ரேஷன் துறை. 20000 மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் பருப்பு கொள்முதல் விதிகளில் கிறிஸ்டி நிறுவனத்தை உள்ளே கொண்டுவருவதற்காக பருப்பு சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்பதை மாற்றி ஏதாவது ஒரு உணவு பொருள் சப்ளை செய்த அனுபவம் இருந்தால் போதுமானது என்று மாற்றப்பட்டது.
இதன் மூலம் முட்டை சப்ளை அனுபவம் இருந்த கிறிஸ்டியை உள்ளே கொண்டு வர வழிவகை செய்தனர். மேலும் அதுவரை பத்திற்கும் மேற்பட்ட பருப்பு மில் மற்றும் வியாபாரிகள் பங்கெடுத்து வந்தனர். ஆனால் turnover ஐ 3 கோடியில் இருந்து 40 கோடியாக மாற்றினர். மேலும் ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி உணவு பொருள் சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்று மாற்றினர்.
இந்த மாற்றங்கள் மூலம் அதுவரை போட்டி போட்டுக்கொண்டு இருந்த அனைத்து பருப்பு மில் மற்றும் வியாபாரிகளை பங்கு பெற முடியாத படி செய்தார்கள். அதுவரை சந்தை மதிப்பிற்கு கொள்முதல் செய்த ரேஷன் துறை சந்தை மதிப்பை விட ரூ 10 முதல் 30 வரை கிலோவிற்கு அதிகமாக கிறிஸ்டி நிறுவனமிடமிருந்து கொள்முதல் செய்தார்கள். இதே போல் பாமாயில் டெண்டரில் 2017லும் சர்க்கரை டெண்டரில் 2019லும் டெண்டர் விதிகளை மாற்றி கிறிஸ்டி நிறுவனங்களை மட்டும் போட்டி போடும் வண்ணம் மாற்றியது ரேஷன் துறை.
6. மே 5, 2021 முடிவடைந்த பருப்பு டெண்டரில் கிறிஸ்டி குழுவினர் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு எடுத்து ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய் 143 முதல் 147 வரை ஒப்பந்தப்புள்ளி தந்தார்கள். அதேபோல் ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்பிற்கு ரூபாய் 139 முதல் 145 வரை ஒப்பந்தப்புள்ளி கொடுத்தார்கள். ஆனால் இரண்டின் சந்தை மதிப்பும் ரூபாய் 100 விட குறைவு.
இந்த ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்த பிறகு புதிதாக பதவியேற்ற தமிழக அரசு கிறிஸ்டி நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் புது டெண்டர் போட்டனர். ஆனால் இந்த முறை நாம் கேட்டுக்கொண்டபடி பல விதிகளை பழையபடி தளர்த்தினார்கள். கிறிஸ்டி நிறுவனங்களைத் தவிர மற்றவர்களும் பங்கு பெற வழிவகை செய்த உடனேயே இந்த ஒப்பந்தத்தில் 11 பேர் பங்கெடுத்து பலரும் 100 ரூபாய்க்கு குறைவாக ஒப்பந்தப்புள்ளி தந்தனர். கிறிஸ்டியன் ராசி நிறுவனம் ரத்தான ஒப்பந்தத்திலும் புது ஒப்பந்தத்திலும் பங்கெடுத்தது.
மே 5 இந்த நிறுவனம் ஒரு கிலோ துவரம் பருப்பு விலை 146.5 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. ஆனால் அதே நிறுவனம் இருபதே நாட்களில் மே 26 அன்று 87 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தை மதிப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதேபோல் கனடா மஞ்சள் பருப்புக்கு மே 5 142 ரூபாய் ஒப்பந்தப்புள்ளி கொடுத்த ராசி நிறுவனம் தற்பொழுது மே 26 அன்று ஒரு கிலோ 78 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்துள்ளது.
அவர்களே ஆவண ரீதியாக இத்தனை நாட்களாக ஒரு கிலோவிற்கு எத்தனை ரூபாய் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆதாரங்களையும் மேலும் மற்றவர்களை போட்டிபோடா வண்ணம் வைப்பதன் மூலமாக எப்படி விலை அதிகமாக பெற்று கிறிஸ்டி நிறுவனம் அரசையும் மக்களையும் ஏமாற்றினார்கள் என்பதன் ஆதரங்களையும் புகாருடன் இணைத்துள்ளோம்.
7. அறப்போர் இயக்கம் இந்த புகாரில் சர்க்கரை பாமாயில் பருப்பு ஒப்பந்த ஆவணங்களை விலாவாரியாக ஆய்வு செய்து அதை ஆதாரங்களாக இணைத்துள்ளோம். மேலும் கொள்முதல் விலையை அன்றைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு எப்படி சந்தை மதிப்பைவிட மிக அதிகமாக விலை கிறிஸ்டியின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். சந்தை மதிப்பிற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளோம். மேலும் கிறிஸ்டி நிறுவனம் மட்டும் பங்கு பெறும் வகையில் டெண்டர் ஆவணங்கள் எப்படி மாற்றப்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். மேலும் எம் எம் டி சி, எஸ் டி சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் போர்வையில் கிறிஸ்டி எப்படி இந்த டெண்டர்களில் போட்டி போட்டது என்பதற்கான ஆவணங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். இவை அனைத்தும் பொது ஆவணங்கள் மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள். விசாரிக்கப்பட வேண்டிய பொது ஊழியர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் எப்படி இந்த கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதையும் புகாரில் வைத்துள்ளோம்
8. பாமாயில் டெண்டர்களில் கடந்த 4 ஆண்டுகளில் கிறிஸ்டி குழு நிறுவனங்களிடம் வாங்கிய 56..56 கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பின் மதிப்பு ரூ.902 கோடி.
மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 6 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு ரூ.870 கோடி.
மேலும் சர்க்கரையில் கிறிஸ்டியிடம் கொள்முதல் செய்த 2.7 லட்சம் சர்க்கரையில் ஏற்பட்ட இழப்பு ரூ 256 கோடி.
குறைந்த பட்சமாக கிறிஸ்டி நிறுவன ஊழலால் மட்டும் தமிழக அரசு இழந்த பணம் ரூ 2028 கோடி
9. உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். இயக்குநர் சுதா தேவி IAS மற்றும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு உடனடியாக கிறிஸ்டி குழு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். மேலும் இழந்த பணத்தை உடனடியாக மீட்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 20ந்தேதி அன்று எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மீதும், குறிப்பாக தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட 8 அமைச்சர்கள் மீது, திமுக சார்பில், திமுக தலைவரும், தற்போதை முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் கூடிய 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்களையும் அதற்கு ஆதாரங்களாக கருதப்படும் ஆவணங்களையும் ஆளுநரிடம் பன்வாரிலாலை சந்தித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.