அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டுதாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
அறந்தாங்கி மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள், இந்த வீரமாகாளி அம்மன்.
சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.
அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், “நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்” என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.
தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது.
எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.
அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, “உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால், அவரை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்” என்றாள்.
இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.
வரம் வேண்டுவோர் அம்மனை நேரில்வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொள்ள வேண்டும்.
இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். குழந்தை வரம் நிறைவேறியவர்கள், அந்தக் குழந்தையைக் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.