சென்னை: லஞ்சம் ஊழல் புகார்கள் காரணமாக விழுப்புரம் பகுதியில் 4 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், ஆரணி வட்டாட்சியர் (தாசில்தார்) மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் 4 பேரின் விடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஆரணியில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மஞ்சுளா லஞ்சம் கேட்டதாக சீனிவாசன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். இதையடுத்து, வட்டாட்சியர் மஞ்சுளா கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 2015 முதல் 2017ம் ஆண்டு வரை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படி உழவர்களுக்கு வழங்கப்பட்ட விபத்து இழப்பீடு, இயற்கை மரணம், திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற திட்டங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் கையாடல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு அரசு உதவிகள், அரசு அனுமதிகள் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியது கட்டாயம் என்பது போல அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இது ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஊழல், முறைகேடுகளை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ச மூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தரராஜன், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தேவிகா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட தாதம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோர்கள் மீது விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில், 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் அரசு ஊழியர் நகர் மற்றும் மந்தக்கரை கீழ செட்டி தெருவில் உள்ள வட்டாட்சியர் சுந்தரராஜன் வீடுகள், செல்வராஜ் நகரில் உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் தேவிகா வீடு மற்றும் வளவனூர் தாதம்பாளையத்தில் உள்ள இடைத்தரகர் முருகன் ஆகியோரது வீடுகளில் கடலூர் மற்றும் விழுப்பரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.