ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், நிரந்தர சட்டம் இயற்றகோரியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய நடைபெற்ற போராட்டம் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, மீண்டும் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழக இளைஞர்களின் போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது, விவசாயிகள் பிரச்சினை, வெளிநாட்டு குளிர்பானங்கள் பற்றியும் குரல் கொடுத்தனர்.
அதையடுத்து வணிகர் சங்க நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் கடைகளில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் விற்க மாட்டோம் என அறிவித்தனர். வரும் மார்ச் 1ந்தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக பல உணவங்களில் பெப்சி, கோக்குக்கு தடை விதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் திரையுலகினரும் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்களை தவிர்த்து வருகின்றனர்.
தனது படப்பிடிப்புதளத்திலும் பெப்சி, கோக்குக்கு தடை விதித்துள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்
கத்தி படத்தின் கதை எழுதத் தொடங்கியதில் இருந்தே பெப்சி மற்றும் கோக் இரண்டையும் குடிப்பதை நிறுத்திவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.