சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை  வலியுறுத்தி தமிழைக விவசாய சங்கங்களின் சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

32 விவசாய அமைப்புகள் கலந்து கொண்ட இந்த இந்த கூட்டத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார்.  பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்படவிவசாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசைவிட மாநில அரசின் துரோகம் பெரியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, அதற்காகப் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டது. 

தமிழகத்தில் 19 மாவட்டங்களின் பாசன, குடிநீர் ஆதாரமாக காவிரிதான் திகழ்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவிரி விவகாரத்தில் இழைக்கப்படும் துரோகங்களைச் சகித்துக் கொண்டு, உரிமைகளை இழந்து உணர்வற்றவர்களாக இருக்க முடியாது.

எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ஏப். 11-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை. காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.