சென்னை:
நாளை மறுதினம் (ஏப்ரல் 11ந்தேதி) தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை ஆதரவு கிடையாது என்று அதன் தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து கடந்த 4ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழைக விவசாய சங்கங்களின் சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் ஏப். 11-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை. காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 11-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில், அரசியல் சாராத அனைத்து காவிரி விவகார போராட்டங்களுக்கும் தமது ஆதரவு என்றும் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், ஏற்கனவே இரண்டு நாள் வணிகர்கள் கடையை அடைந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு நாள் கடையை அடைக்க வாய்ப்பில்லை என்று கூறி உள்ளார்.