மதுரை: கோவில்கள் பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகள் பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பிரபலமான  பல கோவிலின் பெயரில் போலி இணையதளங்களை கோவிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்து, வசூல் செய்துவருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,   சென்னை கபாலீஸ்வரர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பழனி முருகன் கோவில், சென்னை வடபழனி ஆண்டாள் கோவில், பார்த்தசாரதி கோவில் பெயர்களில் போலி இணையதளம் தொடங்கி காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.

இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்தமனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோவில் பெயரில் இணைய தளங்களை கோவிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யப்பட்டது. அதை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்கும் என கூறி  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.