லக்னோ: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.

ஆசம்கார்கில் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. அந்த கட்சி வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை.

எனவே எங்கள் கட்சி சார்பில் மமதாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மமதா பானர்ஜி கட்சிக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தர வேண்டும் என்று மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்தவர்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

எங்களை போல ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைவோம். அடுத்த 2 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.