டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நலம் பாதிப்பு என அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு திடீரென இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் சர்ச்சையானது.
இதையடுத்து, எடப்பாடி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, ஜெயலலிதாவின் மரம் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது. அதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மட்டும் மறுத்து வருகிறது. இது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெற்றது. இது தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்tதாகவும், விசாரணை குழுவில் மருத்துவ நிபுணர்கள் இல்லை என்றும், தேவையில்லாமல் வழக்கு விசாரணைக்கு தங்களது மருத்துவர்களை இழுப்பதாக அப்பல்லோ நிர்வாகம் குற்றம் சாட்டியது.
அப்போலோவின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், அப்பல்லோ மருத்துவமனை சிறந்த மருத்துவமனை என்பதில் எந்தவித மாறுபாடான கருத்தும் கிடையாது. ஆனால், அது, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது. ஆணையத்தின் செயல்பாட்டை அப்பல்லோ மருத்துவமனை முடக்க நினைக்கிறது.
விசாரணை ஆணையம் என்பது உண்மையை கண்டறியும் குழுவே. நிபுணர் குழு அல்ல. நிபுணர்கள் குழுவில்தான் மருத்துவர்கள், நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி அரசிடம் கொடுப்பதே ஆணையத்தின் பணியாகும். அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் ஆகும். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்களை சேர்த்து ஆணையத்தை விரிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.