டில்லி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. அதையொட்டி இது குறித்து விசாரிக்க அப்போதைய அதிமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த்து.
இன்று அந்த விசாரணையில் அப்போலோ நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “ ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. இதில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.
இந்த விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்குக் கசிய விடப்படுகின்றன. ஊடகங்களில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றித் தொடர்ந்து தவறான ஊகச் செய்திகள் வெளியிடப்படுகிறது.எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து தெரிவித்த கருத்துகளே போதுமானவை ஆகும்.
அப்போலோ மருத்துவமனையின் நற்பெயர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.ஜெயலலிதா மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போதாமை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி எப்படி விசாரிக்க முடியும்?.
அவருக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவி இல்லாமல் ஆணையம் கருத்து தெரிவிக்க கூடாது. இந்த ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் எங்கள் மருத்துவர்கள் விசாரணைக்குச் செல்ல விரும்பவில்லை. அதே வேளையில் மருத்துவர்கள் குழு அடங்கிய வேறு விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாராக உள்ளோம்,.
எங்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்பட்டதாகக் கூறியதால் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.