சென்னை

ப்பல்லோ மருத்துவமனை குழுமம் தங்கள் மருத்துவமனைகளில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது.   தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  தினசரி பாதிப்பு 3.8 லட்சத்துக்கு மேல் செல்கிறது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவற்றில் கொரோனா தடுப்பூசியும் ஒன்றாகும்.

கடந்த ஜனவரி 16 முதல் அனைத்து கொரோனா முன் களப்பணியாளர்கள், சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் 40 வயதைக் கடந்து இணைநோய் உள்ளவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 மே 1 முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.  பல இடங்களில் இதற்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மருந்து பற்றாக்குறை காரணமாக இரண்டாம் டோஸ் போடவில்லை.  எனவே நாளை பல மாநிலங்களில் அரசு தரப்பில் கொரோனா ஊசி போடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல அப்பல்லோ மருத்துவமனை குழுமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் நாளை முதல் அப்பல்லோ மருத்துவமனைகளில் 18-44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் இதற்கு மத்திய அரசு அறிவித்துள்ள வழிமுறைப்படி கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.