கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு?

Must read

புதுடெல்லி: கர்நாடக அரசியல் களேபரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதாய் உள்ளது.

இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது; கர்நாடகம் தொடர்பாக இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று கூறியதோடு, சபை நடவடிக்கையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் கலந்துகொள்ளலாம்; அதேசமயம் கட்டாயம் கிடையாது என்றும் கூறி குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

கட்சித்தாவல் தடை சட்டம் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவையின் உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவாக கட்சி மாறினாலோ, தாமாக முன்வந்து கட்சியிலிருந்து ராஜினாமா செய்தாலோ, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க வல்லது.

ஆனால், 15 அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், அவர்கள் விரும்பினால் சபைக்குப் போகலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதானது, அவர்களை கொறடா உத்தரவுக்கு வெளியே நிறுத்தியுள்ளது. ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், அவர்கள் கட்சியின் உறுப்பினர்கள்தான். ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த முரண்பட்ட உத்தரவு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

அதாவது, கட்சித் தாவல் தடை சட்டத்தையே கிட்டத்தட்ட செயல்படாத வண்ணம் முடக்கியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கர்நாடக சட்ட சபையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கலந்துகொள்ளாமல் போனால், கொறடா உத்தரவு அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வது நிச்சயம்.

சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், கட்சித்தாவல் தடைச்சட்ட விஷயத்தில் முரண்பட்ட தீர்ப்பை அளித்து பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்பதும் கவனிக்க வேண்டியதாயுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

More articles

Latest article