புதுடெல்லி: கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில், பட்டாசுகளின் மூலம் வான வேடிக்கை நிகழ்த்த, உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதேசமயம், மத்திய ஏஜென்சிகளால் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. பரமேக்காவு மற்றும் திருவம்பாடி தேவஸ்வாம் அமைப்புகளின் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தீர்ப்பை அளித்துள்ளது.
பூரம் திருவிழா என்பது திருச்சூரின் சமூக மற்றும் கலாச்சார அம்சங்களுடன் தொடர்புடையது என்பதால், பட்டாசு வேடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
திருச்சூரின் வடக்குன்னாதன் கோயிலில் இவ்விழா நடத்தப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில், கேரளாவின் கொல்லம் புட்டின்கல் கோயிலில் நிகழ்ந்த பட்டாசு வான வேடிக்கை விபத்தில், 100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து, 1400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து, அம்மாநிலத்தில் வானவேடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
– மதுரை மாயாண்டி