சென்னை: சென்னையில் வியாசர்பாடி பாலம், ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை என இன்று காலை மழைநீர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும் 2 சுரங்க பாதைகள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையை போக்குவரத்து போலீசார் அடைத்துள்ளனர். அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம் சுரங்ப்பாதை வழியாக செல்ல தடை விதித்துள்ள போலீசார், மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. ஆனால், மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக, தேங்கிய மழைநீர் உடனுக்குன் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், வடசென்னையின் பல இடங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. இதை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தனர். அகே.கே.நகர் பகுதியில் உள்ள ராஜ மன்னார் சாலை உள்பட பல இடங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இன்று காலை விருகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜமன்னார் சாலை , P.T ராஜன் சாலை ராமசாமி சாலை, DOUBLE TANk ROAD, ஆர்.கே சண்முகம் சாலை,அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 2 வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் 6 மாதங்களில் முடிந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்தாண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பெரிய அளவில் வடிகால் அமைக்கப்பட்டதால் தான் மழைநீர் தேங்கவில்லை.
வடகிழக்கு பருவமழை பாதிப்பு இல்லாத சென்னை என்கிற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 400மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலை மாறியுள்ளது. சென்னையில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்குவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது. வடசென்னை வியாசர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி வருகிறது. அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதி தாழ்வான பகுதி என்பதால் மழைநீரை அகற்றுவதில் சிரமம் உள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையை போக்குவரத்து போலீசார் அடைத்துள்ளனர். அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம் சுரங்ப்பாதை வழியாக செல்ல தடை விதித்துள்ள போலீசார், மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.