ஐதராபாத்:

முதியோர் பென்சன் தொகையை அதிகப்படுத்தவும்,சுகாதாரப் பணியாளர்களின்
ஊதியத்தை உயர்த்தவும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்றபின், முதல் அமைச்சரவை கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.

விவசாயத்துறையின் முக்கிய பிரச்சினைகள், முதியோர் பென்சன், மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது.

புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட உள்துறை அமைச்சர் சுஜரித்தா, நிதி அமைச்சர் புக்கன்னா ராஜேந்திரநாத் ரெட்டி, பில்லி சுபாஷ் சந்திரபோஷ், பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் தலைமை செயலாளர் எல்வி. சுப்பிரமணியம்,அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வரின் உத்தரவுப்படி, 8 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கேபினட் கூட்டம் 6 மணி நேரம் நடந்தது.

முதியோர் உதவித் தொகையை ரூ.2 ஆயிரத்திலிருந்து 2,250 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் ரூ12,500 ஊக்கத் தொகை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தவும், மலைவாழ் பகுதி சுகாதார பணியாளர்களுக்கு ரூ.400&லிருந்து 4 ஆயிரம் வரை மாதந்தோறும் ஊதியம் உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் 7 ஆயிரம் மலைவாழ் பகுதி சுகாதார ஊழியர்கள் பயன்பெறுவர். இது தவிர, அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 27% அதிகமாக ஊதிய உயர்வு வழங்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.