டில்லி:
மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றதை தொடர்ந்து, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன் முதன்முதலாக இன்று பட்ஜெட் டை தாக்கல் செய்கிறார்.
நடப்பு 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களுக்கும் அதிகமாக பெற்ற பாரதிய ஜனதா, கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து, தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதன்முதலாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல் திட்டம் தெரியவரும். இந்த நிலையில், 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
இந்த பட்ஜெட்டில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும், வரிசெலுத்துவோரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திடமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
தேக்க நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் வரி வருவாய் குறைவு ஆகிய வற்றை கருத்தில் கொண்டு நீண்ட கால அடிப்படையில், சீர்திருத்தங்கள் முன்பை விட மிகவும் உத்வேகத்தில் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிச்சிருக்குது.
பரம்பரை வரி அதாவது பெற்றோர் மூலம் தங்கள் பிளளைகளுக்கு வரும் சொத்தில் வரி விதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து தரப்பினரையும் உற்று நோக்க வைத்துள்ள இன்றைய பட்ஜெட்டில் என்ன உள்ளது என்பது இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தெரியவரும்.