பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

ஆண்டிகுவாவில் இருக்கும் மெகுல் சோக்சி-யை சர்வதேச காவல்துறை (இன்டர்போல் அமைப்பு) உதவியை இந்தியா நாடியதை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இன்டர்போல்.

2021ம் ஆண்டு மே 23ம் தேதி, மெகுல் சோக்சி டொமினிக்கன் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.

ஆண்டிகுவா காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தன்னை ஆண்டிகுவாவில் இருந்து கடத்தி வந்ததாக கூறிய மெகுல் சோக்சி இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மெகுல் சோக்சி மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டியுள்ளது என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதுகுறித்து நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து மெகுல் சோக்சியை இந்தியா அழைத்துவருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…