விருதுநகர்: கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளர் தலைமறைவாக இருந்து முன்ஜாமின் கோரிய நிலையில், அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்து உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, விருதுநகர் மாவட்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, அப்போது வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த அம்மையப்பன் என்ற விவசாயி கிராம சபை கூட்டமானது வார்டு சுழற்சி முறையில் நடக்க வேண்டும் அவ்வாறுதான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளது ஏன் நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறீர்கள், இதனால் சுற்றி உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாமல் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள், என கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த, இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கள் வைத்துள்ள கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன், கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் அதிகார மமதையில் எட்டி உதைத்தார். அதைத்தொடர்ந்து, அவரது ஆதரவாளரும் அம்மையப்பனை தாக்கினர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த சம்பவம் குறித்து, உடனடியாக அதிகாரிகளும் பொதுமக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீவில்லிபுத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் நமக்கு எதற்கு வம்பு என உடனே இடத்தை காலி செய்து கிளம்பி விட்டார், பின்னர் விவசாயி அம்மையப்பன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், விவசாயி அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர்.
இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், விவசாயி தாக்கிய ஊராட்சி செயலாளரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமறைவு தங்கபாண்டிய, முன்ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி, தங்கபாண்டியனுக்கு முன்ஜாமின் வழங்கி உள்ளது. தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். மேலும், வாரத்தில் ஒருநாள் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், அரசு தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதனால்தான அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயி தரப்பு தெரிவித்து உள்ளது.