வாஷிங்டன்
தடுப்பூசிக்கு எதிராகப் பேசி வந்த வானொலி அறிவிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது ஆதரவாளர் ஆகி உள்ளார்.
அமெரிக்காவில் தென்னிஸ் பகுதியைச் சேர்ந்தவர் பில் வாலண்டைன். சுமார் 61 வயதாகும் இவர் வானொலி அறிவிப்பாளராக பணி புரியும் பிரபலம் ஆவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது வானொலி நிகழ்வில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராகப் பேசி வந்தார். மேலும் தனது ரசிகர்களையும் தடுப்பூசி போட வேண்டாம் என அறிவுறுத்தி வந்தார்,
இந்நிலையில் பில் வாலண்டைனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொரோனா பாதிப்புக்குப் பிறகு அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது உறவினர்கள் மற்றும் ரசிகர்களை உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு இவர் வலியுறுத்தி வருகிறார்.
இது குறித்து அவருடைய சகோதரர் மார்க் வாலண்டைன், “எனது சகோதரர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நான் அவருடைய அறிவுறுத்தலின்படி இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. தற்போது அவருடைய வலியுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பில் வாலண்டைன் பணி புரியும் வானொலி நிறுவனம் டிவிட்டரில், “ட்பில் உடல் நிலை குறித்த இன்றைய காலை நிலை : பில் மனைவி சூசன அவர் உடல்நிலை முன்னேற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சூசன, “என் கணவர் இன்னும் குணமடையவில்லை என மருத்துவர்கள் சொல்கின்றனர். எனக்காக பிரார்த்தியுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாங்கள் அனைவரும் எங்கள் சகோதரருக்காகப் பிரார்த்திக்கிறோம். அவ்வாறே நீங்களும் பிரார்த்திக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். உங்களது கருணையும் ஆதரவும் மிகவும் மகத்தானது. உங்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்,” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.