லக்னோ
வேலைவாய்ப்பு அளிக்காத உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி, காங்கிரஸ் மீது கூர்மையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதற்கு பதிலளிப்பது போல் கடந்த ஐந்தாண்டுக் கால பா.ஜ.க, ஆட்சி மற்றும் மத்திய அரசின் ஆட்சி குறித்து அகிலேஷ் யாதவ் விமர்சித்து வருகிறார்.
காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரப் பிரதேசத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 16.5 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இதில் 4 கோடி மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் கல்விக்கான பட்ஜெட்டில் பெரியளவில் கை வைத்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகமாக இருந்திருந்தால், இளைஞர்களுக்கு புதிய பல்கலைக்கழகங்கள், இணையம், உதவித்தொகை, நூலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கிடைத்திருக்கும் ஆனால் யோகி ஆதித்யநாத் இதைப் பற்றி எல்லாம் பேச மறுக்கிறார். பேசினால் அவரது ஆட்சி பற்றிய உண்மை தெரிய வந்துவிடும் என்பதை அவர் அறிவார்.
அன்பு இளைஞர்களே, இதுதான் இந்தத் தேர்தலின் உண்மையான நிகழ்ச்சி நிரல் ஆகும். நீங்கள். இதைப் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள், உங்கள் வாக்குகள் மூலம் உங்களைத் தவறாக வழி நடத்தியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுங்கள்”. எனக் கூறியுள்ளார். இளைஞர்கள் மத்தியில் இந்த அறிக்கை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.