சென்னை: உயிரை பறிக்கும்  ஆன்லைன் ரம்மிக்கு சென்னையில் மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை அனாதையாகி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் இன்றைய இளைஞர்களிடையே போதையாக மாறி வருகிறது. இந்த விளையாட்டின் மூலம் பல லட்சங்களை இழந்த பலர் ஏற்கனவே தற்கொலை செய்துள்ள நிலையில்,  காவல்துறையைச் சேர்ந்த சிலர் கூட தற்கொலை செய்துள்ளனர். இதனால், தமிழகஅரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், மீண்டும், ஆன்லைன் ரம்பி ஆட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த சூதாட்டத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (30) என்ற கார் ஓட்டுநர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் மற்றும் மனைவி நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்ட போது முருகன் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது தூக்கில் முருகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர்.

முருகனுக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது.  பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. முருகன் தனியாக இருந்து வந்த நிலையில், ஆன்ரம்பி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை பறிகொடுத்துள்ளார். இதனால், மன அழுத்ததுக்கு ஆளான அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  சேலையூர் போலீசார்  முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு முழுமையாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.