மதுரை: மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில், தற்கொலை சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மாணவ மாணவிகளிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 13ந்தேதி) நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்தியஅரசாலும், உச்சநீதி மன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரம்,  நீட் தேர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான  அரியலூர் மாவட்டத்தில்,  மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட அவலம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  ‘நீட்’ தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை காவல்துறையில் எஸ்ஐ ஆக பணியாற்றி வரும், முருகசுந்தரம் என்பவரது மகள்  ஜோதி ஸ்ரீ துர்கா (வயது 19). நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.