சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு காரணமாக, தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்தியஅரசு அரசு அறிவித்ததுள்ளது. இந்த நடைமுறை கடந்த 2017ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு முழுக்க முழுக்க மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இருந்ததால், அதை தமிழக மாணாக்கர்கள் எதிர்கொள்வதும், தேர்ச்சி பெறுவதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் மருத்துவம் படிக்கும் மாணாக்கர்கள், தங்களது கனவு நிறைறோதோ என்ற பயத்தில் தற்கொலைமுடிவை நாடுகின்றனர். இதனால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசு, மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. தற்போதைய திமுக அரசும், நீட் விலக்கு கோரி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றி உள்ளது.
இந்த நிலையில், அரியலூரில் நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதியதுடன், கடுமையான மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார். இவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கனிமொழி, தனது பெற்றோரிடம் வருத்தப்பட்டுள்ளார். தனது கனவு நிறைவேறாதோ என்று புலம்பிக்கொண்டிருந்த மாணவி கனிமொழி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த ர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த 12ம் தேதி அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த 4 வருடங்களில் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.