மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான வீடியோக்கள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

மே 4 ம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணபப்டுத்தி ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வன்முறை கும்பல் குறித்த வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுரசாந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லாம்ஜா கிராமத்தில் உள்ள குக்கி பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்திய மெய்தீய் தீவிரவாதிகள் டேவிட் தேய்க் என்ற இளைஞரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஜூலை 2 ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பழங்குடி இன அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “டேவிட் தேய்க் படுகொலை செய்யப்பட்ட ஜூலை 2 ம் தேதிக்கு முந்திய நாள் இரவு லாம்ஜா கிராமத்தை மெய்தீய் தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டு தாக்கிய நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த பெண்கள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மெய்தீய் தீவிரவாதிகள் இளைஞர்களை குறிவைத்து தாக்கத் தொடங்கினர், அப்போது தனியாக சிக்கிய டேவிட் தேய்க் என்ற இளைஞரை பிடித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி எரித்த பின்பும் தங்கள் ஆத்திரம் தீராததை அடுத்து அவரது தலையை மூங்கில் கொம்பில் செருகி வைத்து சென்றனர்.

இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற போதும் இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீது பாலியல் வன்முறை, மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

மாறாக, வன்முறைக்கு வன்முறை மட்டுமே தீர்வு என்ற மனநிலையை கொண்டாடும் வகையில் மெய்தீய் இன பெண்கள் ஒன்று கூடி வீடுகளுக்கு தீ வைப்பது போன்ற சம்பவம் தொடர்ந்து வருவதும் அதனை ஒரு சார்பாக ஆதரிக்கும் நிலையும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

https://twitter.com/Zubair_memon1/status/1682594316676464641

கடந்த ஐந்து ஆண்டு பைரன் சிங் ஆட்சியில் மணிப்பூர் மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவது பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இனப்படுகொலை குறித்த வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, மணிப்பூரில் நடைபெற்று வரும் காட்டாட்சிக்கு மத்திய பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மணிப்பூர் பெண்ணை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ?