சென்னை: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும்  தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாள் நடைபெற்ற தமிழ் முதல்நாள்  தேர்வை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள்  தேர்வு எழுதாமல் தவிர்த்த விவகாரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.  தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு  தகுதியான அனுபவமுள்ள ஒருவரை  அமைச்சரை நியமித்து கல்வித்துறையை செம்மைப்படுத்த வேண்டும் என பிரபல கல்வியாளர்களை தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணாவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதில், 12 ஆம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும்.

மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாதது தெரிய வந்தது.

அச்சம் காரணமாக தேர்வுக்கு வரமுடியாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் வகையில் பெற்றோர் ஒத்துழைப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.