சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா 12 மணிநேரம் தீவிர விசாரணைக்குபிறகு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதுடன், அவரது மொபைல் போனில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கும் பணியில் காவல்துறை இறங்கி உள்ளது. இந்த போதைபொருள் வழக்கில் காவல்துறையினர் உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்,.

தமிழக திரையுலகில் போதை கலாச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. இதை சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சுசித்ரா என்பவர் வெளியிட்டிருந்தார். சுசி லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிட்ட பல புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பல நடிகர்கள், நடிகைகள் போதை மயக்கத்தில் எல்லை மீறிய காட்சிகள் வைரலாகின. இந்த விவகாரத்தில் காவல்துறை அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. திரையுலகைசேர்ந்தவர்கள் உள்பட பலரும் சுசித்ராவை கார்னர் செய்தனர். ஆனால், தற்போது தமிழ் திரையுலகில் போதை கலாச்சாரம் கொடிகட்டி பறப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த வாக்குமூலங்களைக் கொண்டு பலரை காவல்துறை கட்டம் கட்டி உள்ளது. இதில் இரண்டாவது நபராக சிக்கியிருப்பது நடிகர் கிருஷ்ணா. இவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் சுமார் 12மணி நேரம் விசாரணை நடத்தியதுடன், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் 2 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் உள்ளதா என்பது குறித்தும் சைபர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த அரசியல் பிரமுகர் ‘பிரசாத்’ யார்….?