சென்னை: மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால், தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இவை விரைவில் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு  கொண்டு வரப்பட்டது. இவை சென்னை  டி.எம்.எஸ் வளாகத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அவை மாவட்டங்களுக்க பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், தற்போதைய  8.6 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,  மேலும்,  1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுள்ளது.