அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களுக்கு கணினி உதவியுடன் வெவ்வேறு தொலைபேசி எண்ணில் இருந்து இன்று இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) அழைப்பு வந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரிசைப்படுத்தி எந்த வரிசை எண் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்காமல் அழைப்பை துண்டிக்கும் வாக்காளர்களுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ள நிலையில், இதுபோன்று தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வரும் அநாமதேய அழைப்புகள் சட்டத்திற்கு விரோதமானது என்று தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.