ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால் இந்த முகாம் நடைபெறுமாக என கேள்வி எழுப்பப்பட்டுவந்தது. இந்தநிலையில், இந்த வாரம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், வருமுன் காப்போம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

அந்த வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  2025ம் ஆண்டு அகஸ்டு 2-ம்தேதி தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டத்தின் மூலம் இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்து அதன்மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள திட்டமாகும். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி,  தமிழ்நாடு முழுக்க, 1256 இடங்களில் உயர்தர மருத்துவ மையங்களில் இந்தத் திட்டம் கடந்த 2-ம்தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தத் திட்டம், 17 சிறப்பு மருத்துவத் துறைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஓராண்டு காலத்திற்குப் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.