சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” யாத்திரை இன்று இராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார் . இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2024) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவை அகற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து செயலாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் பாஜக இதுவரை காலூன்ற முடியாத நிலையில், கட்சியை வளர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரை சென்று மக்களை சந்திக்கிறார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்காக அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ஜூலை 29ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை முதல் கட்ட யாத்திரை நடைபெறுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கட்டமாக ஐந்து கட்டம் வரை தமிழ்நாடு முழுவதும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த பாத யாத்திரை செல்லும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சுமார் 168 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, கால்நடையாக 1,800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளதாகவும், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்பாக நிறைவடையும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரையை துவங்கி வைப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு மாலை 5 மணியளவில் வந்து சேர்கிறார். மாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சிறிது தூரம் அண்ணாமலையுடன் நடைபயணம் செல்கிறார்.
இந்த பாத யாத்திரையின்போது, மத்தியஅரசின் சாதனைகளை பிரபலப்படுத்துவதுடன், மாநில அரசின் ஊழல்களை பொதுமக்களிடையே எடுத்துரைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் வேட்பாளர் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற உள்ளது.
இன்று யாத்திரையை தொடங்கி வைக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். பின்னர் நாளை (ஜூலை 29) அதிகாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிறகு காலை 11 மணியளவில் தனியார் விடுதியில் நடைபெறும் அப்துல் கலாம் குறித்த நூல் ஒன்றை வெளியிடுகிறார். அதன் பின்னர் 12 மணியளவில் அப்துல் கலாம் பிறந்த வீட்டைப் பார்வையிடுகிறார். பேய்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். பிறகு பிற்பகல் 1 மணியளவில் சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லத்தைப் பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து 1.20 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு சுமார் மாலை 4 மணியளவில் வந்தடைகிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என்பது அமைச்சர் அமித்ஷா வருகைக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் கூட்டணி கட்சியான அதிமுக கலந்துகொள்ள வேண்டும் என, எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே போல் இந்த பாதயாத்திரைக்கு ஓபிஎஸ்ஸுக்கும் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையிலி, எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரைக்கு வர இயலாது என மறுத்து விட்டார்.
சமீப காலமாக அதிமுக, தமிழ்நாடு பாஜக இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபதிதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்து உள்ளிட்டவைகளால் அதிமுக- பாஜக இடையே விரிசல் அதிகரித்து உள்ளது.