சென்னை:  தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலையை, மாநில தலைவர் பதவியில் இருந்து  மாற்ற வேண்டும் என  பாஜக தலைமையிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக, அதிமுக கட்சிகளை சரமாரியாக தாக்கி பேசி வருகிறார். தமிழகம் முழுவதும்  ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மத்தியஅரசின் சாதனைகளை பேசி வருவதுடன், திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் பேசி வருகிறார். ஏற்கனவே திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மெட்ரோ நிறுவனத்திடம் , அதாவருது, கடந்த 2006-11ல் திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டப் பணிக்கான டெண்டர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு கிடைக்க மு.க.ஸ்டாலின் சாதகமாக செயல்பட்டு அதற்காக ரூ. 200 கோடி லஞ்சம் வாங்கியதாக  குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து டிஎம்கே பைல்ஸ்1, டிஎம்கே பைல்2 வெளியிட்டு உள்ளார்.

அவ்வப்போது  அதிமுக தலைவர்கள் பற்றியும் விமர்சனம் செய்து வருகிறார். செப்டம்பர் 15ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு,  மறைந்த அறிஞர் அண்ணா பற்றி அண்மையில்   பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.  இதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றாத நிலையில், அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும்,  அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாககியுமான ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை தான் அதிமுக தலைவர்களை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை என்னால் கூற முடியாது. அது தேசிய தலைமை தான் கூற வேண்டும். என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அதிமுக கட்சி அங்கும் வகிக்கிறது என்று கூறப்பட்டாலும், தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி புறப்பட்டனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான அமிர்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் பல்வேறு அலுவல் பணிகள் காரணமாக அமித்ஷா தரப்பு நேரம் ஒதுக்க மறுத்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை டெல்லியில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது,  2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர வேண்டுமானால், மாநில தலைவர் பதவியில் இருந்து  அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் வரும் காலங்களில் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பு  எழுந்துள்ளளது.