சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சு வார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மட்டும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, அதிமுக தலைமையிடத்தில் வார்டு பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இதில் சுமூக உடன்பாடு எட்டாத நிலையில், அதிமுக தலைமைய நேற்று மாலை திடீரென வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடர்வதில் கடினம் என்று விமர்சிக்கப்பட்டது.
இநத் செய்தியாளர்களை சந்தித்த, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் தோழமை தொடரும் என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்தே தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், தனித்து போட்டி என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் நான் நேசிக்க கூடிய தலைவர்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.