சென்னை: பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , “கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அண்ணாமலை எங்களை சொல்லவில்லை. எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடன் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்த நிலையில், அவரது பேச்சு விவாதப்பொருளாக மாறியது.
மேலும், 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பாஜக ஒரு புறமும், அதிமுக ஒருபுறமும், தவெக ஒருபுறமும் களமாடி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி எப்படி இருக்கும் என கணிக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 75 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருக்கும் நிலையில், பா.ஜ.கவுடனான கூட்டணி அக்கட்சிக்கு பாதகமாக அமைந்து என குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதையடுத்து, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து 2024ல் நடைபெற்று முடிந்த , லோக்சபா தேர்தலில் தனித்தனி அணியாக களம் கண்ட நிலையில் இரு கட்சிகளுமே தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி குறித்த பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
தவெக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அதிரடியாக கூறி திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளிக்கு தூண்டில் போடுவதுடன், அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அதிமுகவில் எழுந்துள்ள சிறுசிறு உரசல்கள் காரணமாக, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இநத் நிலையில், பாஜகவால் தோற்றோம் என்றவர்கள் பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை விமர்சித்திருந்தது சலசலபபை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மகளிர் தினத்தையொட்டி, சென்னை அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி, பெண் நிர்வாகிகளுக்கு பகிர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணாமலை பேசியது குறித்து அதிமுக மீது அவதூறு பரப்பவேண்டாம். கூட்டணி வைக்க எந்த காலத்திலும் அதிமுக தவம் கிடந்தது இல்லை. கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது என அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்ப வேண்டாம். அதிமுக என்று குறிப்பிட்டு அண்ணாமலை பேசினாரா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியதுடன், தவறா சொல்லாதீங்க..” தேர்தல் கூட்டணி தொடர்பாக, தேர்தலுக்கு 6 மாதம் முன்பு பதில் சொல்கிறேன் என்று கூறினார்.