கோவை: அண்ணாமலை மெத்தப் படித்தவர்.. மிகப்பெரிய அரசியல் ஞானி என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
கட்சி நிகழ்ச்சிக்காக கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி அப்போது அவர் கூறியதாவது,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். அவர், மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி அவர். அவரது கணிப்பு அப்படி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் அல்ல. அதிமுக போட்டியிடதாதற்கு பல்வேறு காரணங்களை கூறி இருக்கிறோம்.
திமுக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அப்போது திமுக எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நாடே அறியும். வாக்காளர்களை ஆடுமாடு போல் பட்டியில் அடைத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்து தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. இதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக பற்றி செய்தி வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்ததற்கு பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்தது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அது அல்ல. 2014-ல் அமைக்கப்பட்ட கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு 42 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசத்தில் இருந்தார்.
தற்பொது அண்ணாமலை ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று இருக்கிறார். 0.25 சதவீதம் தற்போது குறைவாக தான் வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். வெறுமனே பேட்டியின் வாயிலாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பாஜகவின் தலைவராக இருந்தபோது என்ன திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். கோவை தொகுதியில் போட்டியிடும்போது 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
எப்படிப்பட்ட தலைவர்களும் இது போன்ற வாக்குறுதிகளை கொடுத்ததில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் இருக்கிறது. எதிர்பார்க்கிறோம். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அண்ணாமலை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அண்ணாமலை தினமும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். பா.ஜ., தலைவராக இருந்து தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை மத்திய அரசிடம் பெற்று கொடுத்தார். எப்போது பார்த்தாலும் பொய் பேசுகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கோவையில் பொய் சொல்லிதான் ஓட்டு பெற்றார். உண்மை சொல்லி பெறவில்லை. மத்தியில் பாஜ., ஆட்சி அமைத்துள்ளதால், 100 நாளில் நிறைவேற்றுவேன் என முன்னர் கூறிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர் தலைவராக இருப்பதால் தான் 300க்கு மேல் தொகுதிகளை பெற்ற பா.ஜ., தற்போது தொகுதிகள் குறைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. 300க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை சரிவை சந்தித்து இருக்கிறது. அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்து வதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்
. தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்துக்கு ஒருமாதிரியும், சட்டமன்றத்துக்கு ஒருமாதிரியும் வாக்களிக்கிறார்கள்.
அதிமுகவிற்கு என ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் படி தான் நடக்கிறது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால் தான் சசிகலா கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக தொண்டர்களின் மன ஓட்டத்தின் அடிப்படையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று தீர்மானத்தின் அடிப்படையில் தான் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது பொதுக்குழு எடுத்த முடிவு. சசிகலா தான் கட்சியிலேயே இல்லையே. அவர் எப்படி ஒன்றிணைக்க முடியும்.
முன்பு கட்சி பிளவுபட்ட போது, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மனைவி ஜானகி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‛‛ ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்று நடத்துவார். நான் உறுதுணையாக இருப்பேன் ” என்று சொன்னார். அந்த நற்பண்பு சசிகலாவிடம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
பள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கின்றது கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம், கடலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரிக்க அதிமுக பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது .
இவ்வாறு கூறினார்.