பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷா அதிமுக உடன் கூட்டணி டீல் பேசிமுடித்த கையோடு அண்ணாமலை தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

அண்ணாமலையின் சேவை தேசிய அளவில் தேவை என்று அமித்ஷா கூறியதை அடுத்து அண்ணாமலை உட்பட மொத்தம் 39 பேர் தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்து நேரடியாக இமயமலையில் உள்ள பாபா குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், தனது ஆன்மீகப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அண்ணா அறிவாலயத்தின் செங்கல் ஒவ்வொன்றையும் உருவியெடுத்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை காலில் செருப்பு அணியப்போவதில்லை என்று சபதம் செய்திருந்த அண்ணாமலைக்கு மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தனது பதவியேற்பு நிகழ்ச்சியின் போது அண்ணாமலையின் காலுக்கு பொருத்தமான காலணியைக் கொடுத்து அணியச் செய்து வழி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.