சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளி ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என தகவல்கள் பரவி வரும் நிலையில், அந்த இடத்தை வருவாய்துறையினர் நேரில் ஆய்வு செய்து அளவெடுத்து சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஞானசேகரன் சொத்து மதிப்புகள் குறித்து ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வுத்துறை பத்திரப்பதிவு மற்றும் வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
உ.பி. உள்பட பல மாநிலங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களின் வீடுகளை மாநில அரசுகள், புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும், பாலியல் குற்றவாளிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என குரல் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகரான, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர்மீது ஏராளமான கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளதால், அவரை காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லேப்டாப் உட்பட சில ஆவணங்களை கைப்பற்றிய போது, அதில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நகைகள், சொத்துக்கள் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஞானசேகரன் மனைவிகளிடமும் விசாரணை நடந்தது. இந்த நிலையில், ஞானசேகரன் நிறைய சொத்துக்களை வாங்கி போட்டு இருப்பதாக தெரியவந்துள்ளதால் பத்திரப்பதிவு, வருவாய் துறை, சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், ஞானசேகரன் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, ஞானசேகரனின் அடுக்குமாடி வீட்டை வருவாய்த் துறையினர் அளவெடுத்துச் சென்றனர். இந்த வீடு முறைப்படி கட்டப்பட்டுள்ளதா அல்லது கோவிலக்கு சொந்த இடமாக என்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கை, காலில் மாவுக்கட்டு போடப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஞானசேகரனுக்கு முறிந்த எலும்புகளை இணைக்க, அறுவை சிகிச்சை மூலமாக, உலோக உபகரணங்களை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.