சென்னை,

பொறியியல் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், பேராசிரியர்கள் முறைகேடாக விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து,   1,169 பேராசிரியர்கள் பொறியியல் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடக்கூடாது என  அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

இது பேராசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொறியியல் படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்கள் பாரபட்சமாக திருத்தப்படுவதாகவும், பின்னர் அரியர்ஸ்க்கு பணம் கட்டி தேர்வெழுதினால், அப்போது தேர்வு பெற்றதாக அறிவிப்பதாகவும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் மாணவர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பபில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

மேலும், இதுபோன்ற விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, அந்த கல்லூரி மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் போடுவதாகவும் பல  கல்லூரி நிர்வாகமே புகார் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்கூட ஒரு பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலானோர் பெயிலாக்கப்பட்டதாகவும், ஆனால், அந்த தனியார் கல்லூரி நிர்வாகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் முறையிட்டு, விடைத்தாள்களை மறு பரீசிலனைக்கு வற்புறுத்தியதாகவும், அப்போது, பெயிலாக்கப்பட்ட மாணவர்கள், அவர்களே எதிர்பார்க்காத வகையில் அதிகமான மதிப்பெண்களை பேராசிரியர்கள்  வாரி வழங்கியதாக மாணவர்களே சிலாக்கிதனர்.

அதுபோல பேராசிரியர்களை கவனிக்காக ஒருசில பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் எத்தனை முறை அரியர்ஸ் தேர்வு எழுதினாலும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பபதில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பபட்டு வந்தது.

இதுபோன்ற ஏராளமான புகார்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்ததை தொடர்ந்து, திருத்தப்பட்ட தேர்வு விடைத்தாள்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது பெரும்பாலான பேராசிரியர்கள்,  விடைத்தாள்களை ஏனோ தானோவென்று மெத்தனமாக திருத்தி உள்ளது தெரிய வந்தது.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அண்ணா பல்கலைக்கழகம், இதுபோன்று மெத்தனமாக விடைத்தாள்களை திருத்திய 1,169 பேராசிரியர்கள் பொறியியல் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து  அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிய இதுபோன்ற பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.