சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பான நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை குழு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம்  கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 9ந்தேதி அன்று நீதிபதி கலையரசன் வழங்கினார்.

முன்னதாக இதை எதிர்த்து சூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது, சூரப்பா மீதான முறைகேடு தொடர்பாக  விசாரணை ஆணைய அறிக்கை நகலை, சூரப்பாவுக்கு வழங்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழுவின் விசாரணை அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையை, பல்கலைக்கழக துணைவேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன் சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், விசாரணை அறிக்கை மீதான விளக்கத்தை சூரப்பா 2 வாரங்களில் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.