சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  பாலியல் குற்றவாளி ஞானசேகரன்  என்றவர்,  சில ஆண்டுகளுக்கு தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த வழக்கிலும் கைதுசெய்யப்பட்டவர்  மட்டுமின்றி பல்வேறு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள திமுக நிர்வாகியான  ஞானசேகரன், ஏற்கெனவே, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அதுதொடர்பான 15க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு  துப்பாக்கி முனையில் தொழில் அதிபரைக் கடத்திய வழக்கிலும் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான விவரம் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக  அடையாறு பகுதியில்  பிரியாணி உணவகத்தை நடத்தி வரும்  ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளது.   இவர் திமுக நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்மீது பல வழக்குகள் இருந்தாலும், காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக இதுபோன்ற கொடூர சம்பவத்தை ஞானசேகரன் அரங்கேற்றி உள்ளார் என விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதே குற்றவாளி ஞானசேகரன்  துப்பாக்கி முனையில் ஆள் கட்டதலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு,  உத்தர மேரூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் வசித்த வந்தபோது,  கடந்த 2018ம் ஆண்டு,  அந்த பகுதியில் உள்ள   பிரபல டைல்ஸ் கம்பெனி உரிமையாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி, ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். பயந்து போன தொழிலதிபரின் குடும்பத்தினர் பணம் தருவதாக ஒப்புக்கொண்டு,  கடத்தப்பட்ட தொழிலதிபரின் உறவினர்களிடம்  ரூ.12 லட்சம் பணம் பறித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில்,  காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் தொழிலதிபரின் உறவினர்கள் போல ஞானசேகரனுடன் போனில் பேசி மீதி ரூ.13 லட்சத்தையும் கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேல்மருவத்தூர் அருகே ரூ.13 லட்சம் பணத்துடன் வரும்படி ஞானசேகரன் கூறியுள்ளார். பணத்துடன் வருவதாக கூறிய தனிப்படை போலீஸார் ஞானசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் ஞானசேகரன் தப்பியோடி விட்டார்.

இதையடுத்து, திண்டிவனம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரத்திலும் தேடிவந்த திண்டிவனம் போலீசார்,  காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாருடன் இணைந்து ஞானசேகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஞானசேகரன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் துப்பாக்கி யோடு கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பற்றிய மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 2018 -ம் ஆண்டு நடந்த தொழிலதிபர் கடத்தல் சம்பவத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ஞானசேகரன், அதன் பிறகே சென்னை வந்து, கோட்டூர்புரம் பகுதியில்  பிரியாணி கடை நடத்த ஆரம்பித்ததுடன், திமுகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்ததுடன், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டியதுடன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

தற்போது அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்புணர்வு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.