கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றும் ஆஸ்திரியாவின் அண்ணா கிஸன்ஹோபர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாலையில் நீண்டதூரம் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

137 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டும் மகளிர் சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட நெதர்லாந்து மற்றும் இத்தாலி வீராங்கனைகளின் கணக்கை தப்புக் கணக்காக்கி வெற்றி பெற்றுள்ளார் அண்ணா கிஸன்ஹோபர்.

அண்ணா கிஸன்ஹோபர்

இதன்மூலம், 125 ஆண்டுகளுக்குப் பிறகு சைக்கிள் போட்டியில் ஆஸ்திரியா தங்கம் வென்றிருக்கிறது, இதற்கு முன் 1896 ம் ஆண்டு தங்கம் வென்றது.

போட்டி விதிகளின் படி இந்த தூரத்தைக் கடக்க ஐந்து இடங்களில் இடைநிறுத்தம் செய்துகொள்ள வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், எல்லைக்கோட்டை எட்டிய நெதர்லாந்து வீராங்கனை தான் வெற்றி பெற்றதாக நினைத்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார், பின்னர் ஆஸ்திரிய கணிதப் பேராசிரியர் கிஸன்ஹோபர் தனக்கு முன்னால் எல்லைக் கோட்டை தாண்டியதை அறிந்ததும், தனது கணக்கு தப்பாகிப் போனதை எண்ணி வருந்தினார்.

மொத்த தூரத்தை கடக்க மூன்று மணி நேரம் ஐம்பத்திரெண்டு நிமிடம் நாற்பத்தி ஐந்து விநாடி (3:52:45) எடுத்துக்கொண்ட கிஸன்ஹோபர், தனக்கு அடுத்து வந்த நெதர்லாந்து வீராங்கனை அந்நேமிக்க வான் வ்லுட்டேனை விட ஒரு நிமிடம் பதினைந்து வினாடிகள் முன்னதாக இலக்கை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.