டெல்லி: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை தமிழ்நாடு அரசு கைது செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது,  அமலாக்கத்துறையினர் தமிழக அரசு சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில்  காரசாரமாக எதிர்வாதம் வைக்கப்பட்டது. “தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறிவைப்பதாக கூறினார்.

திண்டுக்கல் அரசு மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத் துறை அலுவலக  அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையும் நடந்தது. அங்கித் திவாரி நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. அவரை அமலாக்கத்துறை விசாரிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனால், அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு  நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாத் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அங்கித் திவாரி தொடர்புடைய வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தர லஞ்ச ஒழிப்புத் துறை மறுப்பு தெரிவிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். அத்துடன், “உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது அமலாக்கத் துறை எந்த விசாரணையும் நடத்தாதது ஏன்? இதுபோல முதல் தகவல் அறிக்கையை பிற மாநிலங்களில் அமலாக்கத் துறை கேட்டுள்ளதா? அசாம் முதலமைச்சர் மீதே எஃப்ஐஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்ததா? தமிழ்நாட்டை மட்டும் குறிவைப்பது ஏன்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும்,  பண மோசடி என்பதே குற்றமாகும், அது குற்றத்தின் விளைவு அல்ல.. எனவே பண மோசடி இல்லாமல் ஒரு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத் துறைக்கு எப்படி உரிமை உள்ளது? எந்த குற்ற வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கிறது?  என கேள்வி எழுப்பியதுடன்,  அமலாக்கத் துறையும் சிபிஐயும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டி உள்ளதாகவும், புலனாய்வு அமைப்புகள் வழக்கு விசாரணையில் காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தாத வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர். காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் கைது நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் அவ்வாறு இருப்பின் அதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அங்கித் திவாரி வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கின் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைத்த நீதிபதிகள், வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, அந்த குழுவை நிர்வகிக்க முன்னாள் டிஜிபி அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதுபதி ஆகியோரை நியமிக்கலாம் என பரிந்துரை செய்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தொடர்புடைய பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என எப்படி தமிழ்நாடு அரசு கூற முடியும் என எதிர் கேள்வி எழுப்பினர்.  மேலும், இ சிபிஐ – அமலாக்கத்துறை – மாநில அரசுகள் இடையே பிரச்சனை வருவதால், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசே சட்டம் இயற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது. தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்றும் தெரிவித்தது.

மேலும், அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அங்கித் திவாரி வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.