தஞ்சை ராஜாகோரி சுடுகாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் சமாதிகளில் ஒன்றாகவே அந்த சமாதியும் “கிடக்கிறது”.
புதர் மண்டி, விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளிடையே இருக்கும் அந்த சமாதியில் இருக்கும் கல்வெட்டில், “பட்டுக்கோட்டை அழகிரிசாமி” என்ற பெயரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறது நமக்கு.
ஆம்… திராவிடத் தளபதி என்றும் “அஞ்சாநெஞ்சன்” என்றும் போற்றப்பட்ட.. தந்தை பெரியாருக்கு இணையாக திராவிட கழகத்தவரால் கொண்டாடப்பட்ட அதே அழகிரிதான்!
இந்தியை எதிர்த்து நெடும்பயணம் நடந்தவர். நடைபயண பிரச்சாரம் என்பதை இங்கு அறிமுகப்படுத்தியதே பட்டுக்கோட்டை அழகிரிதான் என்கிறார்கள் திராவிட இயக்க ஆர்வலர்கள். மேலும், “உபன்யாசம் போல இருந்த தமிழக மேடைப் பேச்சை இயல்புத் தமிழுக்கு மாற்றியவர் இவர்தான். இவரது பேச்சுத் தோரணையை சற்று மாற்றி அண்ணா கையாண்டார். அவரை மற்ற அனைவரும் பின்பற்றினர்” என்றும் புகழ்ந்துரைக்கிறார்கள்.
அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அழகிரியின் தீரத்துக்கு ஒரு சான்று:
கடுமையான கோடைக்காலம். செட்டிநாட்டுப் பகுதி.
ஏதோ ஒரு நிகழ்ச்சி. தமிழிசை மேதை சிவக்கொழுந்து அந்த கொடும் வெயிலில் நாதஸ்வரம் வாசித்து வந்துகொண்டிருக்கிறார். வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் ஒரு துண்டைப் போட்டிக்கிறார்.
அங்கிருந்த சனாதானிகள் “கீழ்சாதிக்காரரான சிவக்கொழுந்து மேல் துண்டு அணியக் கூடாது” என்றனர்.
“இது அந்தஸ்துக்காகவோ அழகுக்காகவே போட்டிருக்கும் அங்கவஸ்திரம் அல்ல. வழிந்தோடும் வியர்வையைத் துடைப்பதற்கான துணிதான் இது” என்று சிவக்கொழுந்து சொன்னதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.
“துண்டை எடுக்காவிட்டால் கலவரம் செய்வோம்” என்று அச்சுறுத்தினார்கள்.
அங்கு நாதசுரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அழகிரியும் – அவருடைய நண்பர்களும் கொதித்தெழுந்தார்கள். “சிவக்கொழுந்து துண்டை எடுக்கக் கூடாது. எடுத்தால் நாங்கள் கலவரம் செய்வோம்” என்று முழங்கினார்கள்.
“உயர்சாதிக்கூட்டம்” அடங்கியது. அக்காலத்தில் இப்படி துணிந்து நிற்பது பெரும் புரட்சிக்கு ஒப்பானது.
ராஜாஜி முதல்வராக இருந்த நேரம்.
இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி அழகிரி தலைமையில் புறப்பட்டது. சென்னையில் உள்ள ராஜாஜியின் வீடு நோக்கி சென்றது அந்த பேரணி.
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உட்பட பலர் அப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
செல்லுமிடமெல்லாம் அந்த பேரணிக்கு வரவேற்பு இருந்தது போலவே சில இடங்களில் எதிர்ப்பும் இருந்தது.
ஆம்.. வழியில் சிலர், செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்க ஆயத்தமானார்கள்.
பட்டுக்கோட்டை அழகிரி அவர்களைத் தடுத்தார்.
செருப்புத்தோரணம் கட்டியவர்களைப் பார்த்து பேசினார்:
“உனக்கும் எனக்கும் உரிமையான தமிழுக்கு வருகின்ற தீங்கை எதிர்த்து இந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நட பயணம் செய்கிறோம், தோழர்களே!
நீங்கள் தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி எறிந்திருந்தால் அதை எங்கள் கால்கிலல் அணிந்துகொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார் அழகிரி.
அங்கே அமைதி நிலவியது.
மேடையோ, ஒலிப்பெருக்கி யோ இன்றி கருத்து வெள்ளமாய் கொட்டியது அழகிரியின் பேச்சு.
இறுதியில் தனது பேச்சை இப்படி முடித்தார்:
“இன்னும் சிறிது காலத்தில் செருப்புத் தோரணம் கட்டியோரும் செத்துப்போவார்கள். நானும், இயக்கத்தவர்களும் செத்துப்போவோம்.
வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளை பார்த்து, எங்கள் மரியாதைக்குரிய வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவி நன்றி செலுத்துவார்கள்.
ஆனால் செருப்புத்தோரணம் கட்டி எங்களை இழிவு செய்கிற தோழர்களே! உங்களது சமாதிக்கு உமது சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் உங்கள் சமாதியில் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்று முடித்தாராம் பட்டுக்கோட்டை அழகிரி.
செருப்புத் தோரணம் கட்டியவர்கள் கண்ணில் நீருடன் செருப்புத் தோரணத்தை அறுத்தெரிந்து மன்னிப்பு கேட்டுச் சென்றனராம்.
இப்படிப்பட்ட உணர்ச்சிகர பேச்சுக்கு, செயல்பாட்டுக்குச் சொந்தக்காரர் அழகிரி.
இவர் மீது அண்ணா பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அழகிரி உடல் நலிவுற்று இருந்தபோது, “என்னை கூட்டத்துக்கு அழைக்கிற தோழர்கள், , அழகிரிக்கு நூறு ரூபாய் மணிஆர்டர் அனுப்பிவிட்டு அந்த ரசீதை என்னிடம் தந்தால்தான் தேதி தருவேன்” என்று அறிவித்தார் அண்ணா.
அழகிரியின் நினைவாகத்தான் தனது மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. பட்டுக்கோட்டையில் அழகிரிக்கு சிலையும் நிறுவினார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அழகிரி பெயரில் போக்குவரத்துக்கழகம் துவங்கினார்.
அழகிரி மறைந்த போது பெரியார் சொன்னது இதுதான்: ” நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30ஆண்டு கால நண்பரும்… மனப்பூர்வமாக நிபந்தனை இன்றி நமது கொள்கைகளை பின்பற்றிவருகிற ஒரு கூட்டு பணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில்,ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.
அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார்” என்றார் பெரியார்.
இந்த அளவுக்கு மி முக்கியமான திராவிடத் தலைவராக விளங்கியவர் அழகிரி.
காச நோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்த அழகிரியின் உடல் தஞ்சை ராஜாகோரி சுடு/இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான அந்த பட்டுக்கோட்டை அழகிரியின் சமாதி இன்று மனித, விலங்கு கழிவுகளுக்கிடையே புதர்மண்டி சிதிலமடைந்து கிடக்கிறது.
“வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளை பார்த்து, எங்கள் மரியாதைக்குரிய வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவி நன்றி செலுத்துவார்கள்” என்ற அழகிரியின் பேச்சு நினைவுக்கு வருகிறது.
செய்திக்கட்டுரை: டி.வி.எஸ். சோமு.
படங்கள்: தஞ்சை. இரா. பெரியார்