சென்னை,

மிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக அமைப்பினர்  போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இன்று 5வது நாளாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த வதந்தியால் சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் வாயில்  கருப்புத் துணியுடன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள், கடற்கரை பகுதியில் உள்ள மாநில கல்லூரி மாணவர்கள், நந்தனம், பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரி வாசல்கள் அடைக்கப்பட்டு, அவர்கள் வெளியே வராதவாறு போலீசார் காவல்காத்து வருகின்றனர்.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் கோந்தரங்கம் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, தூய சவேரியார் கல்லூரி களில் மாணவர்-மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரி விக்கும் பதாகைகளுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல தூய யோவான் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தை அறிவித்தைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது.

பாளையங்கோட்டை ரஹ்மத்நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளாகத்திற்குள் மற்றொரு தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் புகுந்து போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க முயன்றனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தை யைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

பேட்டையில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

அதுபோல் திருவாரூர் பகுதியில் பள்ளி மாணவர்களும் திடீரென போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சாலைய மறித்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கோவை, திருச்சி, சேலம், மதுரை மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.