சென்னை,
நீட் தேர்வு காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் கிடைக்காததால், 1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டமும் மறியலும் நடைபெற்று வருகின்றன.
அனிதா மரணமடைந்து 3 நாட்கள் ஆகியும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவர்களின் போராட்டம் சூடுபிடித்து உள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற் குள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக் அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
திருச்சியில் பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையிலும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகவும் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பத்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் தற்போது 200 மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், “அனைவரும் தோழி அனித்தாவுக்காகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாங்கள் இதனோடு விவசாய பிரச்னைகளையும் விவசாயிகள் நிலை குறித்தும் பேசப்போகிறோம்.
என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். திருச்சியில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் எங்களோடு இணைய வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினர்.
அனிதாவுக்கு நீதி வழங்க கோரி கும்பகோணம் அரசு கலை கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரிகளிலும், திருச்சி, மயிலாடுதுறை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், சேலம், கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலும் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
அனிதா தற்கொலை காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.