டில்லி,
நீட் தேர்வு காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து, 196.75 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவி தனது கனவான மருத்துவர் படிப்புக்கு இடம் கிடைக்காததால், மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார்.
தமிழக அரசின் கையாலாகாததனத்தால் மாபெரும் வரலாற்று பிழை மாணவி அனிதாவின் மரணத்தால் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வை அமல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இதுவரை பாடத்திட்டங்கள் மாற்றப்படாத நிலையில், சிபிஎஸ்இ கல்வித்திட்ட பாடத்தின்படி கேள்வி கேட்கப்படும் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், மத்திய அரசின் வஞ்சகத்தாலும், தமிழக அரசின் கையாலாததனத்தாலும், ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் வழக்கு காரணமாகவும் தமிழக கிராமப்புற இளைஞர்களின் கனவை உச்சநீதி மன்றம் கலைத்துவிட்டது.
இதன் காரணமாக பிளஸ்2 பாடத்தில் ஆயிரத்து இறுநூறுக்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும், தனது கனவான மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தனது கனவு கலைந்து விட்டதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி அனிதா அனியாயமாக தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.
அரியலூரை அருகே உள்ள செந்துறை குரூமூரை சேர்ந்த சண்முகம் என்ற மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. இவருக்கு தாய் கிடையாது. தந்தையின் உழைப்பில், தனது டாக்டர் கனவை நிறைவேற்றும் வகையில், கடுமையாக படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
ஆனால், நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தார். காரணம், அவர் தமிழ்வழிக் கல்வியில் படித்ததால் அவரால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பாக தமிழக அரசின் அறிவிப்புக்கும், அவசர சட்டத்திற் கும் எதிராக வாதாடிய நளினி சிதம்பரத்தின் வழக்குக்கு எதிர் மனுதாரராக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தனது தரப்பு நியாயத்தை வலியுறுத்தியும், அவரது டாக்டர் கனவுக்கு சுப்ரீம் கோர்ட்டு செவிசாய்க்காமல் கண்ணை மூடிக்கொண்டதால், இன்று அவரது கண்களும் மூடியுள்ளது.
இவ்வளவு அதிக மதிப்பெண் பெற்றும் மத்திய அரசின் வஞ்சகத்தாலும், தமிழக அரசின் கோழைத்தனத்தாலும், நளினி சிதம்பரம் போன்றோரின் மக்கள் விரோதபோக்கினாலும் இன்று தமிழகம் ஒரு தலைசிறந்த மாணவியை இழந்துள்ளது.
மாணவி அனிதா தற்கொலை மறைவு காரணமாக தமிழக அரசு வரலாற்று பிழை செய்துள்ளது.
மாணவின் அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம்? கடைசி வரை தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று கூறிவந்த அமைச்சர் விஜயபாஸ்கரா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனா அல்லது பலதடவை பிரதமரை சந்தித்து பேசி, தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று கூறிவந்த முதல்வர் எடப்பாடியா?
மாணவி அனிதா மறைவு தமிழக மாணவர்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடையையும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.