ஒரு குடும்பத்தின் பிடியில் இந்திய விலங்குகள் நல வாரியம்!   அதிர்ச்சி தகவல்கள்!

Must read

இந்திய விலங்குகள் நலவாரியம் ஒரு தம்பதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தம்பதி இருவரும் பீட்டா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள், இதில் அமெரிக்க வாழ் பீட்டா அமைப்பின் தலைவருக்கு விலங்குகள் நல வாரியத்தில் பதவி அளித்திருக்கும் கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை  கடந்த மூன்று  ஆண்டுகளாக நடத்த முடியாமல் போனதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடை.  இந்தத் தடைக்கு முக்கியக்காரணம், இந்திய விலங்குகள் நலவாரியம், மற்றும் ‘பீட்டா’ என்ற அமெரிக்க சார்பு அமைப்பு ஆகியவைதான்.

இந்த இரு அமைப்பும் தொடுத்தட வழக்கால் தான், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல், தடை விதித்திருக்கிறது.

மத்தியஅரசின் மேற்பார்வையில், ஆலோசனையில் செயல்பட வேண்டிய சுயாட்சி பெற்ற அமைப்புதான் இந்திய விலங்குகள் நல வாரியம். ஆனால் இந்த வாரியம்,  தனியார் தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்பதுதான் வேதனை.  இதனால்தான் தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு அமெரிக்க நிறுவனத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆம்.. உண்மை அதுதான்.

இந்திய விலங்குகள் நலவாரியத்தை அதன் அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு குடும்பம் தான் தலைமை தாங்கி இயக்கிக் கொண்டு இருக்கிறது.அதில், சட்டவிரோதமாக  பீட்டா தலைமை நிர்வாகிக்கு  உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது!

சின்னி கிருஷ்ணா, அவரின் மனைவி நந்திதா கிருஷ்ணாவின் ஆகியோரும், அவர்களுக்கு வேண்டியவர்களும்தான் இந்திய விலங்குகள் நல வாரியத்தை இயக்கி வருகிறார்கள்.

இவர்களில் சின்னி கிருஷ்ணா இந்திய விலங்குகள் நல வாரியத்தின்(ஏ.டபிள்யு.பி.ஐ.) துணைத் தலைவராக இருக்கிறார். இவர்தான் புளூ கிராஸ் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இவரின் மனைவி நந்திதா கிருஷ்ணாதான், புளு கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர்.  மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் யுமெயின் விலங்குகளுக்கான தொண்டு நிறுவனத்தின் ஒரு முக்கிய உறுப்பினராகவும், நந்திதா செயல்படுகிறார்.

இவர்களின் குடும்பமும் இவர்களைச் சார்ந்தவர்கள் தான் நாட்டில் உள்ள அனைத்து தனியார் விலங்குகள் நல அமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார்கள்.  விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினர்களையும்  இவர்கள்தான்  நியமிக்கிறார்கள்.

அதாவது, இந்திய விலங்குகள் நலவாரியம் என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சுயாட்சி பெற்ற அமைப்பு. இருந்தாலும், மத்தியஅரசின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு  செயல்பட வேண்டும். ஆனால் ஒரு குடும்பம் மட்டும் கோலோச்சுகிறது.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணைத்தலைவராக இருக்கும் சின்னி கிருஷ்ணா, தனக்கு தேவையான தனியார் விலங்குகள் நல அமைப்புக்கு மட்டும் அங்கீகாரம் அளித்து அதை அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாற்றிவிடுவார். மற்ற அமைப்புகள் உண்மையில் விலங்குகள் நல அமைப்பாக இருந்தாலும் அவர்களை அங்கீகாரம் பெற்ற அமைப்பாக அறிவிக்கமாட்டார்.

சின்னி கிருஷ்ணா தான் அங்கீகாரம் அளித்த விலங்குகள் நல அமைப்பில், தனது சொல்படி நடக்கும் இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினரை அந்த விலங்குகள் அமைப்பின் இயக்குநராக அமர்த்திவிடுவார். இந்த தொண்டு நிறுவனங்கள் தான் இப்போது இந்திய விலங்குகள் நல அமைப்பை கட்டுப்படுத்தி நடத்தி வருகின்றன.

அதாவது..  பீட்டா, எச்.எஸ்.ஐ., பி.எப்.ஏ. ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் இன்றைய சூழலில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை கட்டுப்படுத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய இந்திய விலங்குகள் நல வாரியம், இன்று தன்னிஷ்டத்துக்கு செயல்படுகிறது.   மத்திய அரசு அளிக்கும்  ஆலோசனைகளை புறக்கணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த பீட்டா, பி.எப்.ஏ., எச்.எஸ்.ஏ. போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள்தான்.

இந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் என்பவை, பெயரில் மட்டும் “தொண்டு” வைத்திருப்பவை. மற்றபடி பன்னாட்டு நிறுவனங்களின் அப்பட்டமான கைக்கூலிகள்தான் இந்த அமைப்புகள்.  அந்த பெரு நிறுவனங்களின் நிதி உதவியில் செயல்படும் இவை, அதாவது, அந்த பன்னாட்டு நிறுவனங்களின் விரல் அசைவுக்கு ஏற்றபடி இவை செயல்படும். இந்த தொண்டு நிறுவனங்களின் கண்ணசைவுப்படி  இந்திய விலங்குகள் நல வாரியம் நடக்கும்.

அதனால், தான் ஜல்லிகட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காக, புகழ்பெற்ற 11 மூத்த வழக்கறிஞர்கள், 49துணை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 80 வழக்கறிஞர்களை நியமித்து, பீட்டா அமைப்பு வழக்கை நடத்தி வருகிறது. தினமும் கோடிக்கணக்கில் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் கொடுத்து பீட்டா, உள்ளிட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் வழக்கை நடத்தி வருகின்றன., இந்த வழக்கை நடத்துவதற்கும், இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் செலவு செய்யப்படவில்லை.

இந்திய  விலங்குகள் நல வாரியம் வெளிநாட்டு நிறுவனங்களால் மறைமுக இயக்கப்படுகிறது என்பதை அறிய மிகச்சிறந்த உதாரணம்….  பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பூர்வா ஜோஷிபுரா, இந்தியரே அல்ல. அமெரிக்க குடியுரிமை பெற்றவர். .

மத்திய அரசால், கட்டுப்படுத்தப்படும், நிர்வகிக்கப்படும் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் வாரிய உறுப்பினராக அமெரிக்காவைச் சேர்ந்த, அதிலும் பீட்டா அமைப்பின் இந்திய தலைவரான பூர்வா ஜோஷிபுரா பொறுப்பு வகிக்கிறார்.

இந்திய அரசால் நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் ஒரு சுயாட்சி பெற்ற வாரியத்தில் அமெரிக்கர் பொறுப்பு வகிப்பது எப்படி நடந்தது?

இந்த கேள்விகளுக்கு இந்திய விலங்குகள் நலவாரியம் பதில் அளிக்குமா?

சரி, இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு என்ன…

பலரும் சொல்வது போல, இந்திய விலங்குகள் நலவாரியத்தை கலைப்பதே தீர்வு!

More articles

Latest article